இலங்கையில் தயாரிக்கப்படவுள்ள சேலன்

வருட இறுதிக்கு முன்னர் இலங்கைக்கு தேவையான சேலனை நாட்டிலே தயாரிப்பதற்கு தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று மருந்து தயாரிப்பு மற்றும் ஒழுங்குறுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சந்தன ஜயசுமண தெரிவித்தார்.

அநுராதபுர மாவட்டத்தில் நொச்சியாகம என்ற பிரதேச மக்களால் இராஜாங்க அமைச்சருக்கு அளிக்கப்பட்ட வரவேற்று நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இந்த வருடத்திற்குள் இந்த சேலன் தயாரிப்புக்களை பொது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தற்பொழுது இலங்கையில் பயன்படுத்தப்படும் மருந்து வகைகளில் 90 சதவீதமானவை வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தமக்கு இந்த பதவியை வழங்கிய சந்தர்ப்பத்தில் 5 வருட கால திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் சில மருந்து வகைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுரை வழங்கியதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.