இலங்கையில் கோவிட்-19 அச்சம் காரணமாக மேலும் மூன்று இடங்கள் பாதுகாப்பு வலயத்துக்குள்..!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாலிக்கா தென, எலுவாபிட்டிய மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகள் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 வைரஸ் நோய் தொற்றாளர்கள் 37 பேர் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கம்பஹா மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த மூன்று கிராம சேவகர் பிரிவிற்கு உப்பட்டவர்கள் 7 ஆவது கிராம சேவகர் பிரிவிற்கு உட்பிரவேசிக்கவோ வெளிச்செல்லவோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் ஊழியர் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்ட நபரே இவ்வாறு கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த வைத்தியசாலையில் 7 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மூன்று பகுதிகளிலும் 12,000க்கும் மேற்பட்ட மக்கள்  வசிப்பதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும்  தெரிவித்துள்ளார்.