இலங்கையில் அரசியல்சாசனம் இல்லை. இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு!! சம்மந்தன்.!!

இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை ஐனநாயகத்தீர்ப்பின் ஊடாக தமிழ்மக்களும், சிங்களமக்களும் நிராகரித்திருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல்சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒருதோல்வியடைந்தநாடு என்று தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்தார்.
வவுனியாவிற்கு இன்று விஐயம்செய்த அவர் தமிழரசுக்கட்சி காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்…

பாராளுமன்றத்தேர்தல் ஒன்று இடம்பெறப்போகின்றது. நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட்டு அதனூடாக ஆட்சிஅதிகாரங்கள் தொடர்பான விடயங்கள் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்கள் விசேடமாக வடகிழக்கில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய நாளாந்த விடயங்களை தாமே நிறைவேற்றுவதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும்.

அதிகாரங்கள் மத்தியில் குவிந்திருக்காமல் சமஸ்டிகோட்பாட்டின் அடிப்படையில் அவை பரவலாக்கப்பட்டு உள்ள சுயநிர்ணய அடிப்படையில் அந்த தீர்வுகள் வழங்கப்படவேண்டும். மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் இடம்பெறுகின்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அதிகாரத்தை கொழும்பில் குவிக்காமல் அந்தந்த பகுதிகளில் மக்களால் ஐனநாயக ரீதியாக தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்கள் மூலமாகவும், அமைக்கப்படுகின்ற சபைகளூடாகவும் அந்த கருமங்களை நிறைவேற்றும் முகமாக அந்த தீர்வு இருக்கவேண்டும். இது எமது நீண்டகால போராட்டம். அது ஒரு நியாமான கோரிக்கை அது அவர்களின் பிறப்புரிமை. இதற்காகவே தந்தைசெல்வா தமிழரசு கட்சியை உருவாக்கி நீண்ட காலமாக போராடியிருந்தார்.


13ஆம் திருத்தச்சட்டத்தை எமது பிரச்சினைக்கான முழுமையான தீர்வாக நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் பலகுறைகள் இருக்கின்றது. அதி உச்ச அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் இந்த பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். அந்தந்த பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்கள் தமது தலைவிதியை தீர்மானிக்ககூடிய சூழல் சட்டரீதியாக ஏற்படுத்தப்படவேண்டும்.

இதுதொடர்பாக நாம் கடந்த ஆட்சியில் பல முன்னேற்றகரமான விடயங்களை முன்னெடுத்தோம். அதன் மூலம் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்துக்கள் காணப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக அந்த அரசாங்கம் தொடர்ந்து ஆட்சி புரியக்கூடிய சூழல் இருக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனால் அந்தகருமத்தை தொடரமுடியவில்லை. ஆனால் விரைவில்தொடருவோம், தொடரவேண்டும். புதிய பாராளுமன்றம் கூடியபின்னர் அரசியல் சாசனம்தொடர்பாகவும், அதிகாரப்பரவல் தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டும்.

ஒரு மக்கள் குழாமுக்கோ அல்லது தனித்தேசிய இனத்திற்கோ சுயநிர்ணய உரிமை நிச்சயம் உண்டு. அது மறுக்கப்பட்டால் அவர்களிற்கு வெளியக சுயநிர்ணய உரிமை வழங்கப்படவேண்டும். அதுதான் நிலமை, அது எங்களது பிறப்புரிமை. நாம் இந்த உலகில் பிறந்தவுடனேயே அந்தஉரிமை எமக்கு உருவாகின்றது. அது நிறைவேற்றப்படவேண்டும். அதற்காக 70 வருடங்களாக நாம் பயணிக்கின்றோம்.
இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஆரம்பகாலம் தொடக்கம் இந்தகருமங்களில் பங்களிப்பை செய்து அதனை வழிநடாத்திவருகின்றது.

இம்முறை தேர்தலில் 20 ஆசனங்களை நாம் பெறுவோம் என்று எதிர்பார்கின்றோம்.வன்னியில் உள்ள ஆறு ஆசனங்களில் 5 இணை நாம்பெறவேண்டும். அது வன்னிமக்களின் கடமை. யாழில் 6 பேரை பெறவேண்டும். மட்டக்களப்பில் 4 பேரையும் திருமலையில் 2பேரையும் பெறுவதற்கான முயற்சிகளை எடுக்கின்றோம்.

கோட்டாபய ஐனாதிபதியாகத்தெரிவுசெய்யப்பட்டு இரண்டு நாட்களிற்கு பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள்  தீர்க்கப்படவேண்டும். நீதியின் அடிப்படையில் கௌரவத்தின் அடிப்படையில் அது தீர்க்கப்படவேண்டும். என்று இந்தியபிரதமர் மோடி தெரியப்படுத்தியிருந்தார்.
அவர் தெரிவுசெய்யப்பட்டு இரண்டு நாட்களிற்குள் இந்திய பிரதமர் தனது பிரதிநிதியை அனுப்பி அந்த விடயத்தை ஐனாதிபதிக்கு தெரிவித்திருந்தார். அது நிறைவேற்றப்படவேண்டும். இந்தகருமத்தை நிறைவேற்றுவோம் என்று  இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. எனவே இவற்றை நிறைவேற்றுவதற்கு உங்கள் சார்பில் ஒரு பலமான அணி பாராளுமன்றம் செல்லவேண்டியது அவசியமாகின்றது.
சர்வதேச ரீதியாக இந்த நாட்டில் ஒரு அரசியல் சாசனம் இல்லை.1956 ஆண்டு முதல் தமிழ்மக்கள் இந்த அரசியல் சாசனத்தை நிராகரித்து வருகின்றார்கள். ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை பிரகடணத்தின் அடிப்படையில் ஒரு நாட்டில் ஆட்சி புரிவதற்கு அந்தநாட்டு மக்களின் இணக்கப்பாடும் ஒருமித்தகருத்தும் இல்லாமல் அந்தசாசனம் உருவாக்கப்படமுடியாது. இந்தநாட்டில் அந்தவிடயத்தை தமது ஐனநாயகத்தீர்ப்பின் ஊடாக தமிழ்மக்களும், சிங்களமக்களும் நிராகரித்திருக்கின்றார்கள்.எனவே இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை. அது உருவாக்கப்படவேண்டும். அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்தநாடு. ஆட்சிபுரிய முடியாதநாடு. இது ஒரு பெரியசாவால், இதனை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் எதிர்நோக்கியே தீர்வினை காணவேண்டும்.
நாங்கள் அந்தவிடயங்களில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள் அதில் பங்குபற்றியிருந்தவர்கள் நாம் தான் அவற்றை பேசினோம், நாம் தான் அதனை வரைந்தோம். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து அனைவரும் முறையாக வாக்களிப்பதுடன், வன்னியில் 5 இடங்களை பெறவேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.