இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் தயாரில்லை -கே. மஸ்தான் எம். பி.

இலங்கையின் இறையான்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் எமது ஜனாதிபதியோ, பிரதமரோ செல்லமாட்டார்கள். என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.ஜனாதிபதியின் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா  ஈஸ்வரிபுரத்தில்  75 மில்லியன் ரூபா செலவில் 2.4 கிலோ மீற்றர் நீளமான வீதியினை புனரமைப்பு செய்யும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இந்த அரசாங்கத்தின் மேல் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கொவிட்-19 பிரச்சனையால் உலகமே தடுமாறிய வேளையில் ஜனாதிபதியால் கொண்டுவரப்பட்ட சகல வேலைத்திட்டமும் கிடப்பில் போடப்படவில்லை.
அதனை அமுல்படுத்துவதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மற்றம் கொவிட் 19 தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்சவுடன் இணைந்து எமது பகுதி மட்டுமல்லாது நாடு பூராவும் நடைபெறும் அபிவிருத்திகளில் தேக்கம் ஏற்படாதவாறு செயற்படுகின்றனர்.

குறிப்பாக கா.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களிற்காக ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தினை உருவாக்கி முதல் கட்ட வேலைவாய்ப்பினை அண்மையில் வழங்கியிருந்தனர். அதேபோல் பட்டதாரிகளிற்கான வேலைவாய்ப்பு இவை அனைத்தும் வறுமையை ஒழிக்கும் ஜனாதிபதியின் செயற்பாடுகளிற்காகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இத்திட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல கருத்துக்களை சொன்னார்கள். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் பல பொய் பிரசாரங்களைச் செய்திருந்தார்கள். அத்தோடு தற்போது ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்திக்கு தற்போதுள்ள பொருளாதார நிலைமையில் இச்செயற்திட்டம் முன்னெடுக்ப்பட முடியாது என்று அரசியல் பேசினார்கள் ஆனால் இவ்வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது.
அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சு செயலாளர் வந்திருந்தார், சீனாவிலிருந்து உயர்மட்டக் குழுக்கள் வந்திருந்தது ஆகவே நாட்டின் இறையாண்மையை இவை பாதிக்கும் என்று பேசிக்கொண்டு திரிகிறார்கள்.

இலங்கை கேந்திர முக்கியத்துவமான ஒரு நாடாகும். எல்லோருக்கும் எமது தேவைப்படும் அதற்காக எங்களது இறையான்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் எமது ஜனாதிபதியோ, பிரதமரோ செல்லமாட்டார்கள்.
அரசியலுக்காக எதிர்க்கட்சியினர் இப்படிதான் சொல்வார்கள். இப்படித்தான் தேர்தல் காலங்களிலும் சொல்லி வந்தார்கள். ஆனால் யார் என்ன சொன்னாலும், அபிவிருத்தி பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும். கடந்த காலங்களில் நாம் பல முறை சொல்லியிருந்தோம், நாங்கள் ஆளும் கட்சி சார்பாக ஆளப்போகும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று. அதே போல் நீங்களும் வாக்களித்திருந்தீர்கள். இந்த மாவட்டத்தில் நாம் பெருவாரியான வாக்குகளைப் பெற்றிருந்தோம்.ஒவ்வொரு முறையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தான் முதலாவதாகவும், முன்னாள் அமைச்சர் இருந்த கட்சி இரண்டாவதாகவும் வரும் ஆனால் இம் முறை அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
பல பொய்யான குற்றச்சாட்டுகள் என் மேல் சுமத்தப்பட்டது எந்த ஒரு விடயத்திலும் நான் இதுவரையில் தவறிழைத்திருக்கவில்லை.

நீங்கள் அளித்த வாக்குகளுக்கு நான் உண்மையுள்ளவனாய்த்தான் இருக்கிறேன். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் என்ற அடிப்படையில் பல வேலைத்திட்டங்களை நாம் அடையாளப்படுத்தி வருகிறோம். யுத்தத்திற்கு பிறகு ஒரு நிலையான, நீண்ட அபிவிருத்திக்குரிய வேலைத்திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை அவற்றை எதிர்காலத்தில் ஆரம்பித்து எமது மக்களின் பொருளாதாரத் துறைகளான, விவசாயம், கால்நடை, மீன்பிடி ஆகியவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்தி வறுமைக்கோட்டை குறைக்கும் செயற்திட்டங்களைச் செய்வோம் என தெரிவித்தார்.