இரணைதீவில் ஜனாசா புதைப்பு விவகாரம் – மகஜரை பூநகரி பிரதேச சபை ஏற்க மறுப்பு

இரணைதீவில் ஜனாசா புதைப்பு விவகாரம் தொடர்பான மகஜரை பூநகரி பிரதேச சபை ஏற்க மறுத்துள்ளது. இரணைதீவில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை புதைப்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு தெரிவித்த மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் மற்றம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இரணைதீவு மக்கள் இணைந்து அரச திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு மகஜர்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச சபையினருக்கு குறித்த மகஜரை வழங்குவதற்காக குறித்த குழுவினர் சென்றுள்ளனர்.இதன்போது குறித்த மகஜரை ஏற்றுக்கொள்வதற்கு பிரதேச சபையினர் முன்வரவில்லை. பொறுப்பு வாய்ந்த தரப்பினரான பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்ட போதிலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.முக்கிய பொறுப்புவாய்ந்த பொறுப்பில் உள்ள பிரதேச சபை பொதுமக்கள் விடயம் சார்ந்து பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.