இயற்கை தந்த காயங்கள்.

First Aid for Electric Shock | Australia Wide First Aid | Melbourne

அசுரக் காற்றொன்று
ராட்சச கரம் கொண்டு
அப்பாவி நிலங்களை சூறையாடியது

நடுநிசி என்றும் பாராது புகுந்து
உயிரையும் உடைமையையும் பிடுங்கி
வாரிச்சுருட்டியபடி வீதிக்கு வந்து
ஊளையிட்டுச் சென்றது
அய்யகோ
எம்மக்கள்
வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி
அலறினர் துடித்தனர்

தோராயமாய் அரசு
குறித்து வைத்திருந்த சேத மதிப்பீட்டையும்
தாண்டி நீண்டது பாதிப்பு

நகரமோ கிராமமோ
இருளை கக்கியது
குடிசையோ மாடியோ
வெள்ளத்தை பருகியது

வெறும் நீரையே குடித்து நின்றதால்
வீடுகள் மற்றும் மரம் பயிர்கள் சாய்ந்தன
இதில்
மனிதம் மிருகம் பறவைகள் செத்தன

வேறுபாடுகளின்றி
ஒரே புள்ளியில் குழுமி
உணவு தயாரித்து பரிமாறிக்கொண்டன
மனிதநேயம்

வறட்சிக்கும் மழைக்கும் புயலுக்கும்
பலியாவது விவசாயமும் விவசாயியின்
நிம்மதியும் என்பது வாடிக்கை

இப்படி நொறுங்கி கிடக்கும் இதயத்தை மெல்ல பொறுக்கியெடுத்தபடி
மேலெழ முயற்சிக்கையில்
விவசாயக்கடன்
ஹைட்ரோ கார்பன் மீத்தேன் என
தொடர் தாக்குதல்கள்

அதையும் தாங்கியபடி
ஒரு கைகளில் விளைவித்த, பயிரினை
அள்ளி நீட்டுகிறான்

அதிலும்
அவன் விளைவித்த தரமான
பயிரினை நம்மிடம் தந்திவிட்டு
தரமற்ற உணவினை உட்கொள்வதை

என்ன சொல்ல…

ஒரு லாரி சத்தம் அல்லது
ஒரு கார் சத்தம் கேட்டாலோ
உணவோ குடிநீரோ என
எழுந்தெழுந்து ஓடிப்போய்ப் பார்ப்பதை

என்ன சொல்ல….

இயற்கை தந்த காயங்கள்
ஒரு புறமிருந்தாலும்
உதவிக்கரங்கள் நீட்டும் அன்பில்
அது ஆறிப்போகட்டும்…..!