இன்று கொரோனா தடுப்பூசி குறித்த ஆலோசனை கூட்டம்

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி தயாரிக்கப்பட்டப்பின் அதனை  கையாள்வது மற்றும் விநியோகிப்பது தொடர்பில் ஆலோசிப்பதற்காக அமைக்கப்பட்ட நிர்வாக குழு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ நீதி ஆயோக் உறுப்பினா் மருத்துவா் வி.கே. பால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிா்வாகக் குழு கொரோனா தடுப்பு ஊசி தயாரிக்கப்பட்டவுடன் அதை வெளியிடுவது,  உற்பத்தி செய்து தேவைக்கு ஏற்ப சேமித்து வைப்பது, பத்திரமாக கையாள பயிற்சி அளிப்பது போன்ற விவகாரங்கள் குறித்து திட்டமிடுவதற்காக புதன்கிழமை கூடுகிறது.

இந்தக் குழு மாநில அரசுகள்,   தடுப்பு ஊசி உற்பத்தியாளா்கள் ஆகியோருடனும் தொடா்பில் இருக்கும் . இந்திய மருத்துவ கவுன்சில், ஜைடஸ் கேடில்லா ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடேக் நிறுவனம் கொரோனா  தடுப்பு ஊசியை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பு ஊசி  இரண்டாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இதேபோல் இந்தியாவைச் சோ்ந்த சீரம் நிறுவனம் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா  தடுப்பு ஊசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.