இனவாதத்தை மூலதனமாக்கும் வங்குறோத்து அரசியலை கைவிடுங்கள்-பாராளுமன்ற உறுப்பினர் க. மஸ்தான்

 

எமது வன்னி மாவட்ட மக்களின் அபிலாஷைகள் தேவைகள் என்பனவற்றை அடிப்படையாக கொண்டே எமது அரசியலை முன்னெடுத்து செல்கிறோம்.
இனவாதத்தை தோளில் தூக்கி கொண்டு மக்கள் மத்தியில் செல்கின்றவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படுகின்ற நிலைமையை நம்மால் அவதானிக்க முடிகிறது எனவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு தலைவருமான காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.


இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்  அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இனவாதத்தை அடிப்படையாக வைத்து வங்குறோத்து அரசியலை செய்பவர்கள் அதைக் கைவிட்டுவிட்டு மக்களுக்குத் தேவையான  காத்திரமான அரசியலை செய்ய முன்வர வேண்டும். 
யுத்தத்தால் படுமோசமாக பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கு நான் அர்ப்பண சிந்தையுடன் செயற்பட்டு வருகிறேன் என்பதற்கு எனக்கு வாக்களித்த மூவின மக்களும் சாட்சியாக இருக்கின்றனர்.
அந்த மூவினமும் சரிநிகர் சமானமாக அபிவிருத்திகளை பெற வேண்டும் என்பதில் நாங்கள்  உறுதியாக இருக்கிறோம். 


இனமத பிரதேச அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நின்று மனித நேயமிக்க சேவைகளை நாம் ஆற்றுகின்ற பொழுது எம் மீது சில வங்குறோத்து  அரசியல்வாதிகள்  காழ்ப்புணர்ச்சி கொண்டு கருத்துக்களை உமிழ்ந்து வருவதை எமது மக்கள் தெளிவாக உணர்ந்து வைத்துள்ளனர்.
தேர்தலில் வெற்றி  பெற்ற மறுதினமே  மக்களிடம் இருந்து வெருண்டோடும் இவர்கள் ஐந்து வருடங்களுக்கு பின் மனச்சாட்சியற்று அந்த மக்களிடமே மீண்டும் வந்து இனவாத விசத்துடன் வந்து வாக்குகளை கொள்ளையடித்து திரும்பவும் தமது உல்லாச வாழ்வுக்கு  மீண்டு விடுகின்ற அவலநிலையை நாங்கள் காண்கிறோம்.
இவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த நீண்ட நெடிய காலத்தில் வன்னி மாவட்டத்தை எவ்வளவோ அபிவிருத்தி செய்திருக்க முடியும்.  
அதனைச் செய்யாமல் தமக்கு வாக்களித்த மக்களின் வாழ்வாதாரம் உயர உழைக்காமல் இனவாதம் மூலம் வாக்குகளை பெற எத்தனிக்கின்றனர் இந்த நிலை மாற வேண்டும்,எமக்கு வாக்களித்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்றவர்கள் முன் வர வேண்டும்.
எமது நடவடிக்கைகள் செயற்பாடுகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் மக்களுடைய ஆதரவு எம் பக்கமே இருக்கும் என்பது எமது பலமான நம்பிக்கையாகும் எனவும் குறிப்பிட்டார்.