இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்

இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான சுமத்ராவில் உள்ள சினாபுங் என்ற எரிமலை இன்று காலை முதல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் எரிமலையை அண்மித்த பகுதியில் உள்ள கிராமவாசிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இவ் எரிமலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார் 3,280 அடிக்கும் அதிகமான புகை மற்றும் சாம்பலை காற்றில் வெளியேற்றியுள்ளது,

மேலும் சூடான சாம்பல் மேகங்கள் தென்கிழக்கில் ஒரு கிலோமீற்றர் தொலைவு பயணித்ததாகவும் இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் தீங்கு குறைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, எரிமலையின் வாயிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் இடம்பெயருமாறு கிராமவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எரிமலையின் ஆபத்து குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை புகை மற்றும் சாம்பலினால் விமானப் பயணம் பாதிக்கப்படவில்லை என்றும் இந்தோனேஷிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த எரிமலைக் குமுறுல் காரணமாக இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் சினாபுங் எரிமலையைச் சுற்றியுள்ள வீடுகளிலிருந்து சுமார் 30,000 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2,600 மீட்டர் உயரம் கொண்ட சினாபுங் எரிமலை 2010இல் வெடிப்பதற்கு முன்பு நான்கு நூற்றாண்டுகளாக செயலற்று இருந்தது.

2010 இல் குறித்து எரிமலை வெடித்ததன் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர், 2014 இல் ஏற்பட்ட மற்றொரு வெடிப்பில் 17 பேரும் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.