இந்திய அணி அபார வெற்றி!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 13ம் தேதி 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்று களமிறங்கிய இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 329 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதையடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து இங்கிலாந்து வெற்றி பெற 482 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் வெறும் 19 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து இன்று 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்களை அடுத்தடுத்து வெளியேற்றி இந்திய அணி வீரர்கள் அசத்தினர். இதன்மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருப்பதால், அடுத்து நடக்க உள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. இதனால் அடுத்து நடக்க இருக்கும் 2 போட்டிகளிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.