இந்தியாவின் மலிவு விலை மின்சார காரை பிரபல நடிகை பயன்பாட்டிற்கு வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் யார் என்பதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்று வாகனமாக உலகமே மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிக் கொண்டிருக்கின்றன. மின்வாகனங்கள், கடுமையாக உயர்ந்துக் கொண்டிருக்கும் எரிபொருள் விலைவாசியில் இருந்து தப்பிக்க உதவும். இதுமட்டுமின்றி, சுற்றுப்புறச் சூழலுக்கும் அவை நண்பனாக செயல்படும்.
இதனால்தான் இந்தியா உட்பட உலக நாடுகள் பல மக்களை மின் வாகனங்களின் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவிலும்கூட மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பு சலுகைகளை மாறி மாறி அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், பிரபல நடிகையும், ஆடை வடிவமைப்பாளருமான மந்திரா பேடி டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மின்சார காரை பயன்பாட்டிற்காக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், டாடா மின்சார கார் பிரிவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், மந்திரா பேடி மற்றும் அவரது கணவர் ராஜ் கவுசல் ஆகிய இருவரும் டாடா நிறுவனத்தின் புத்தம் புதிய நெக்ஸான் மின்சாரக் காருடன் நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், இந்த புகைப்படத்தின் மூலம் அவர் டாடா நெக்ஸானின் டெக்டானிக் நீளம் நிறம் கொண்ட மாடலை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக, திரைப் பிரபலங்கள் விலையுயர்ந்த ஆடம்பர கார்களை மட்டுமே வாங்கும் பழக்கத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதை மட்டுமே கேட்டு வந்த நமக்கும், மந்திரா பேடியின் இந்த கொள்முதல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், தற்போது இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் மின்சார கார்களிலேயே டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மின்சார கார்தான் மிக மிக விலை குறைந்த காராக இருக்கின்றது. இக்கார், இந்தியாவில் ரூ. 13.99 லட்சங்கள் ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதற்கு போட்டியாக எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா ஆகிய கார்கள் விற்பனைக்கு இருக்கின்றன.

இவை, டாடா நெக்ஸான் மின்சார காரைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்த விலையைக் கொண்டிருக்கின்றன. அதாவது, நெக்ஸான் காரைக் காட்டிலும் 70 முதல் 80 சதவீதம் வரை உயர்ந்த விலையை அவைக் கொண்டிருக்கின்றன. எனவேதான், நெக்ஸான் மின்சாரக் காரை மந்திரா பேடி வாங்கியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மந்திரா பேடி நடிகை மற்றும் ஆடை வடிவமைப்பாளராக மட்டுமே தனது பங்கினை திரைத்துறையில் வகித்து வரவில்லை. அவர் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செயலாற்றி வருகின்றார். இவ்வாறு, பல ரோல்களில் அவர் வலம் வந்துக் கொண்டிருப்பதனாலயே நாட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக அவரும் திகழ்கின்றார். இவரின் பங்கு அனைத்தும் பாலிவுட் பக்கம் மட்டுமே இருப்பதால் நம்மில் பலர் இவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தற்போது டாடா நெக்ஸான் காரை வாங்கியிருப்பதன் மூலம் அவரைப் பற்றிய தகவல் நாடு முழுவதும் பரவிய வண்ணம் இருக்கின்றது. டாடா நிறுவனத்தின் இந்த தயாரிப்பு விலையில் மட்டுமில்லை, தொழில்நுட்பத்திலும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதில் லிக்யூடு கூல்டு, டஸ்ட் மற்றும் தண்ணீரால் சேதமாகத ஐபி67 திறனுடைய பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முழுமையான 312 கிமீ தூரம் வரை செல்லும்.

இது, 30.2 kWh பவரைக் கொண்டதாகும். மேலும், இதில் பொருத்தப்பட்டிருக்கும் 95kW மின் மோட்டார் 129 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது, அதிகபட்சமாக மணிக்கு 0 பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 9.9 செகண்டுகளிலேயே தொட உதவும். இதுமட்டுமின்றி ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் இந்த காரில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த திறனானது பேட்டரியை வெறும் 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜேற்ற உதவும். இதுமட்டுமன்றி, செல்போன் ஆப் மூலமே காரில் உள்ள 35 அம்சங்களைக் கட்டுப்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற காரணங்களினாலயே டாடா நெக்ஸான் மின்சார கார் பலரை ஈர்த்து வருகின்றது. மந்திரா பேடியையும் ஈர்ப்பதற்கு மேற்கூறிய அம்சங்களே காரணமாக உள்ளது.

இக்காரின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக டாடா நிறுவனம் அண்மையில் மாதச் சந்தா திட்டத்தை அறிமுகம் செய்தது. ஏற்கனவே மலிவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார காரை கூடுதல் மலிவாக்கும் நோக்கில் இந்த சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்ததாக அறிவித்திருந்தது.