இந்தியாவின் சாதனை

இந்தியாவில் ஒரேநாளில் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சாதனை பதிவாகியுள்ளது.

இதன்படி நேற்று ஒரேநாளில் நான்கு இலட்சத்து 20 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் கண்டறியப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் தீவிரமாக அதிகரித்துவருகிறது. தற்போது நாளுக்கு நாள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் நாடு முழுவதும் நான்கு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 584968 கொரோனா பரிசோதனைகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை விரைவான அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள், கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை தொடருமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இவ்வாறு அதிகரிக்கும் போது அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டாலும் இறுதியில் சடுதியான சரிவை அடையும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே மத்திய, மாநில அரசுகளின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் உயிரிழப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அதன் வீதம் 2.35 ஆக சரிந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் நேற்று வரையா காலப்பகுதியில் குணமானோர் வீதம் 63.54 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.