இணையத்தளம் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்ய நடவடிக்கை

புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை இணையத்தளம் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இட்டவல இந்த தகவலை எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பெயர்ப்பட்டியல் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வெளியிடப்பட்ட பின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு முறையும் புதிய நாடாளுமன்ற அமர்வு கூடுவதற்கு முன்னதாக, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுவது வழமை எனவும், நாட்டில் நிலவும் சுகாதார நிலைமை காரணமாக, இந்த செயன்முறையை இணையத்தளம் ஊடாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இதன்மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை விபரங்கள் திரட்டப்படும் எனவும், நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இட்டவல குறிப்பிட்டார்.

இதேவேளை, பொதுத்தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகளில் பின்பற்றப்படவுள்ள சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பிலான வழிகாட்டல் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால்  சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, குறித்த சுகாதார வழிக்காட்டல்கள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் முகக்கவசம் அணிதல்  கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் ஒரு மீற்றர் சமூக இடைவெளிக்கமைவாக அமர வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கையடக்கத் தொலைபேசி மற்றும் பேனை போன்ற தனிப்பட்ட கருவிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாதிருப்பதுடன், தொடுகை மூலம் வாழ்த்தும் முறைகளைப் பின்பற்றாதிருத்தல் போன்ற விடயங்களும் இதில்  உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.