இசை குறிப்புகள் திருட்டு: இளையராஜா புகார்

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தனக்கு ஒதுக்கப்படட ரெகார்டிங் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விலை மதிப்பற்ற இசை குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் திருடி விற்கப்பட்டுள்ளன என இசையமைப்பாளர் இளையராஜா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.


சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளையராஜா சார்பில் நேற்று அளிக்கப்பட்ட புகார், சென்னை சாலிகிராமத்தில் திரைப்பட தயாரிப்பாளரான எல். வி. பிரசாத்திற்கு சொந்தமான பிரசாத் ஸ்டூடியோ என்ற கட்டடம் உள்ளது. இதில் ஒரு பகுதியை எல். வி. பிரசாத் ரெகார்டிங் தியேட்டர் அமைக்க எனக்கு ஒதுக்கி தந்துள்ளார்.

அதில் பல கோடி செலவு செய்து, பாடல் பதிவு கூடங்கள் அமைத்தேன். ஏராளமான இசை கருவிகள் மற்றும் விலை மதிப்பற்ற இசை குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அந்த இடத்தில் இருந்து தான் 1977ல் இருந்து தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களுக்கு 7000க்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளேன்.


இந்தநிலையில் செப்டம்பரில் எல். வி. பிரசாத்தின் வாரிசான ரமேஷ் பிரசாத்தின் மகன் சாய் பிரசாத் என்னை அந்த இடத்தில் இருந்து வெளியேற்ற பல வழிகளில் தொல்லை கொடுத்தார் எனவும் சட்ட விரோதமாக மின்சாரம் மற்றும் தண்ணீரை துண்டித்தார். தற்போழுது ஊரடங்கு காரணமாக எனது ரெகார்டிங் தியேட்டர் பூட்டப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சாய் பிரசாத் தூண்டுதலில் மர்ம நபர்கள் எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள இசை கருவிகள் மற்றும் ஏனைய பொருட்களை சேதப்படுத்தி இருப்பதாக தான் அறிந்ததாகவும் கூறியுள்ளார்.


அத்துடன் விலை மதிப்பற்று தனது இசை குறிப்புகள் திருடப்பட்டு வேறு நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு தெரிய வந்துள்ளது இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். சாய் பிரசாத் மற்றும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.