இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கத்திக்குத்து: ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் கடந்த ஆண்டு முதல் பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.அதிலும் குறிப்பாக துப்பாக்கிச்சூடு, கத்திகுத்து உள்ளிட்ட சம்பவங்கள் அங்கு அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டில் உள்ள லண்டனில் கத்தியுடன் வந்த பயங்கரவாதி ஒருவன் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இங்கிலாந்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்நாட்டில் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று மேலும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்காமில் நடைபெற்றுள்ளது. இன்று அதிகாலை 12.30 முதல் 2.30 மணி வரையிலான நேரத்தில் கத்தியுடன் வளம்வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் மக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். அதில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இது குறித்து தெரிவித்துள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையின் தலைமை கண்காணிப்பாளர் ஸ்டீவ் கிரஹாம் “இன்று அதிகாலை நிகழ்வுகள் துன்பகரமானவை, அதிர்ச்சியூட்டும் மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பயமுறுத்துகின்றன. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை விரைவாக கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்குவோம் என தெரிவித்துள்ளார். 

இருப்பினும் இந்த சம்பவங்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என வெளியுறவுத்துறைச் செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.