ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு விதிமுறையை மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தனிமைப்படுத்தும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் 2வது பெரிய நகரமான மெல்போர்னில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மெல்போர்னில் மட்டும் கடந்த ஜூலை 9ம் தேதி முதல் 6 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையடுத்து அரசின் நடவடிக்கைகளை மீறுபவர்களை கண்காணிக்க காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பெரிய மாகாணமான விக்டோரியாவில் தனிமைப்படுத்தும் விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்களுக்கு 3,559 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,67,000) விதிக்கப்படும் எனவும் அதே தவறை மீண்டும் செய்பவர்களுக்கு 14,250 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,70,000) வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் முறையாக தனிமைப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், இந்த குற்றச்சாட்டு உறுதியானது. அதனால் இந்த அபராத நடவடிக்கையை எடுக்க மாகாண அரசு முடிவெடுத்தது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 18,730 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 232 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடுகையில் இங்கு வைரஸ் தொற்று குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.