ஆளும், எதிரணி எம்.பிக்கள் ரணிலுடன் சங்கமம்” – செயலாளர் பரபரப்பு தகவல்

” 42 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அரசியலமைப்பையே மாற்றியமைத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சி வசம் தற்போதுள்ள ஒரு ஆசனத்தை 60 ஆக்குவதென்பது ‘சிம்பிளான’ விடயமாகும்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவை பெயரிடுமாறுகோரும் ஆவணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நேற்று தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்தார்.

இதன்படி இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் நாளை 18 ஆம் திகதி வெளியிடும் எனவும், 22 அல்லது 23 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் பதவியேற்பார் எனவும் தெரியவருகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவிடம் ஆவணத்தை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரங்கே பண்டார கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக்கட்சி பெற்ற வாக்குகளுக்காகவே ஓர் தேசியப்பட்டில் கிடைத்தது. அது இலவசமாகக் கிடைக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம். நாட்டுக்காகவும், மக்களுக்காகவுமே அவரை அனுப்புகின்றோம்.

கைவசம் ஒன்றுதான் உள்ளது. அதன் பிரதிபலன் 60 ஆக மாறும். இதன்மூலம் நான்கூறவரும் விடயம் மக்களுக்கு புரியும். அரச மற்றும் எதிரணி உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் பேச்சு நடத்திவருகின்றனர். அதன் பலனையும் எதிர்காலத்தில் அறியக்கூடியதாக இருக்கும்.