ஆளுமை உள்ள மக்கள் பிரதிநிதிகளாக தம்மை உருவாக்க வேண்டிய தமிழ் அரசியலாளர்கள்

தமிழர் தரப்புக்கு பலத்த எதிர்பார்ப்பு மிக்கதான பாராளுமன்றமாக 9 ஆவது பாராளுமன்றம் அமைந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. 
இந்நிலையில் அமையப்பெற்றுள்ள பாராளுமன்றத்திற்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உரிமை மற்றும் அபிவிருத்திசார் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இவ் இரு அபிலாசைகளையும் நிறைவேற்றக்கூடிய வல்லமையுள்ளவர்கள் இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனரா என்ற கேள்வி நிறைந்தேயுள்ளது.


பாராளுமன்றம் என்பது வெறுமனே குரல் எழுப்புவதும் அதனை தமது சாதனையாக முகப்புத்தகத்தில் பதிவேற்றுவதுமாக மாறிவிட்ட தமிழர் தரப்பு அரசியலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப்பீடமேறியுள்ள அரசிடம் எதனை சாதித்துவிட கூடிய வல்லமை உள்ளவர்கள் என்பது தொடர்பில் ஆராயப்படவேண்டும்.
கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளாக அலங்கரித்த பலரையும் தமிழ் மக்கள் மீண்டும் பாராளுமன்றம் அனுப்பியுள்ள நிலையில் சில புதிய முகங்களும் சென்றிருப்பதனை மறுப்பதற்கில்லை.
எனினும் அவர்களது ஆளுமை என்பது பலம் பொருந்திய பாராளுமன்றத்தில் ஈடுகொடுக்கும் தன்மையுள்ள வகிபாகத்துடன் உள்ளார்களா என்பது சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவே தோன்றுகின்றது.
கருத்தியலை கருத்தியலால் வெல்லக்கூடிய மொழிப்புலமையும் சிந்தனை சக்தியும் உள்ளவர்களாக இருத்தல் என்பது பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பினை பொறுத்தவரையில் சிறப்பானதாக அமையும்.
எனினும் வன்னி பிரதேசத்தினை பொறுத்தவரையில் அப்பகுதி தமிழ் மக்களின் தெரிவு இந்த வரையறைகளுக்குள் இல்லாமை எதிர்வரும் காலங்களில் பாரிய தாக்கதினை ஏற்படுத்த வல்லனவாகவே இருக்கின்றது.
இல்ஸாமிய தரப்பினர் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற போது கல்வி மற்றும் சமூக பற்றுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசியல் கலாசாரத்தினை கொண்டிருக்கின்றனர்.
எனினும் தமிழ் மக்கள் அவ்வாறான ஒரு அரசியல் மனோபாவத்திற்குள் தம்மை ஆட்படுத்திக்கொள்ளாத நிலையில் அவர்களது பல்வேறுபட்ட அபிலாசைகளும் நிறைவேற்றப்படாத பகல் கனவாகவே கடந்துபோகின்றது.
தமிழ் மக்களின் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தியவர்கள் என்ற ஒரு நிலை வாதத்தின் அடிப்படையில் வன்னி மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து வருகின்றமையானது அம் மக்களின் அரசியல் மற்றும் உரிமை சார் விடயங்களை மாத்திரமின்றி அபிவிருத்தி தொடர்பிலான நகர்வுக்கும் பெரும் தடையாக இருக்கும் என கூறுகின்றமை வேப்பம் சாறாக இருந்தாலும் கூட ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
இந்நிலையில் பாராளுமன்ற பாராம்பரியங்களுக்கு அமைய தமிழ் பிரதிநிதிகள் தமது செயற்பாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டிய போதிலும் கூட தமது தரப்பு மக்கள் நிலைப்பாடுகளை எடுத்தியம்பும் மனோதிடத்தினை தேசியம் சார்ந்து பாராளுமன்றம் சென்றவர்கள் தமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
முதல்நாள் அமர்வின்போதே சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தூங்குவதான புகைப்படங்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல் நெறிகள் தொடர்பிலும் மக்கள் தமக்கான பாடத்தினை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
எதிர்வரும் 5 வருடங்களுக்கு தமக்கான உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்துள்ளது மக்கள் அக்காலப்பகுதியில் இவர்களை ஏன் அனுப்பினோம் என்ற மனோ நிலைக்கு செல்லாத வகையில் தமது ஆளுமை விருத்தியிலும் உள்ளூர் சர்வதேச விடயங்களிலும் அதிக அக்கறையுடன் புடம்போட வேண்டிய தேவை உள்ளதனை மறுத்துவிட முடியாது.
எனவே மக்கள் தந்த வாய்ப்பை மக்கள் நலன்சார்ந்தும் இனம் சார்ந்தும் தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகள் செயற்பட மறுத்தால் தமிழ் மக்கள் தமது அரசியல் மற்றும் உரிமை சார்ந்து கொண்டுள்ள அபிலாசைகள் தொடர்பில் வெறுப்புணர்வுக்கு செல்வதனையும் அரசியல் ஈர்ப்பில் இருந்து மெல்ல தடம்மாறி தேசியக்கட்சிகளின் மீதான அபிமானிகளாக மாறுவதனை தடுக்க முடியாது போகும் என்பதே ஜதார்த்தம்.