ஆலயத்திற்கு வருகைதருவோரை பதிவுசெய்யும் பொலிசார்

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்றுவரும் நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிசார் ஈடுபட்டுவருகின்றனர்.


இதனால் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் அச்சமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறித்த பதிவு நடவடிக்கை கோவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணத்தால் முன்னெடுக்கப்ட்டுவருவதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
எனினும் இவ்வாறான செயற்பாடுகளால் ஆலயத்திற்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதுடன், பொதுமக்கள் அச்ச மனநிலையுடன் வழிபாடுகளில் ஈடுபடவேண்டியுள்ளதாக நிர்வாகத்தினர் விசனம் தெரிவிக்கின்றனர்.
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவிழா நிகழ்வினை நடாத்துவதற்கு நெடுங்கேணி பொலிசாரால் தடை கோரப்பட்ட நிலையில் அதனை வவுனியா நீதவான் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டிருந்தது.

எனினும் பொலிசார் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்காத நிலையில் தற்போது மக்களை அச்சுறுத்தும் வகையில் பதிவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.