ஆறாக் காயங்கள்….


அன்றொருநாள்
அரவமற்ற நள்ளிரவில்
நிறைகடலின் ஆர்ப்பரிப்பும்
குறைகண்ட என் ஆன்மாவும்
அலுத்துக் கொண்டது,

நிர்வாணமாய்க் கிடந்து
நீர்ச்சேலையணிந்த
நீலக்கடலே
ஆழிநீரிலும் குருதி கொப்பளிக்க
திட்டம் போட்டதேனோ?

செகத்தவரும் சிறப்பாய் வாழ
மீனாகவும் முத்தாகவும்- உம்
சொத்துக்களைத் தந்து விட்டு -எம்
சொந்தங்களைப் பறித்தாயே!

ஆரவாரத்தின் ஆட்சியில் நீயும்
ஆடியே தீர்த்த
ஊழித் தாண்டவமும்
உயிர்களை மேய
உடலின் தசைகளும்
பங்கு போடப்பட்டன,

இரத்தத்திலே ஊறி
உவர்ப்பிலே உப்பிய
உடல்களால் உயர்ந்த
பிணங்களின் மேடு
கண்ணெட்டும் திசையெங்கும்
மண்திட்டியானது,

பறித்த உயிரால்
விரித்த தலையுடன்
வேர்த்தழும் இதயத்தோடு
நகர்ந்திடும் நாட்களிலே
நிம்மதியைத் தொலைத்திட்டோம்,

ஓலங்கள் ஓயாமல்
காலத்தை உண்டு
அகவைகள் கடந்தாலும்
ஆறாத காயங்களாய்
எம் நெஞ்சில் நிலைத்திருக்கும்
ஆன்மாக்களுக்காகப் பிரார்த்திப்போம்.