ஆர்மீனியா-அசர்பைஜான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் ஆர்மீனியா-அசர்பைஜான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு தரப்பும் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன.

மேலும், தாங்கள் கைப்பற்றிய நகோர்னோ-கராபத் மாகாணத்தின் முக்கிய பகுதிகளை அசர்பைஜான் தங்கள் வசமே வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.இதன் மூலம் பல வாரங்களாக நடந்த போரில் ஆர்மீனியா தோல்வியடைந்து அசர்பைஜான் வெற்றிபெற்றதாகவே தெரியவந்துள்ளது.மேலும், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க ரஷ்ய படைகள் நகோர்னோ-கராபத் மாகாணத்தில் இருநாட்டு எல்லைகளை பிரிக்கும் பகுதிகளில் குவிக்கப்படுகிறது.

இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் ரஷ்ய படைகள் அமைதியை நிலைநிறுத்தும் வகையில் நகோர்னோ-கராபத் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ஆர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லை நகரமான நகோர்னோ-கராபத் மாகாணத்தின் முக்கிய நகரங்களை அசர்பைஜான் படையினர் கைப்பற்றினர்.

இந்த மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட போதும் 1994 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மாகாணத்தின் பெரும் பகுதியை ஆர்மீனியா கைப்பற்றியது.அன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாகக் கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா – அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது. பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது.

இதனை அடுத்து ஆர்மீனியாவுக்கு ஆயுத ரீதியில் ரஷ்யா ஆதரவு அளித்த போதும் நேரடியாக களத்தில் இறங்காமல் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர மூன்று முறை அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது.ஆனால், தொடர்ச்சியான மோதல்களால் அமைதி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, அசர்பைஜான் – ஆர்மீனியா இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வந்தது.

இதற்கிடையில், நகோர்னோ-கராபத் மாகாணத்தில் உள்ள முக்கிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுஷா என்ற நகரை அசர்பைஜான் படைகள் கைப்பற்றியது.இதையடுத்து, 6 வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் இறுதிக் கட்டத்தை எட்டியதுடன் நகோர்னோ-கராபத் மாகாணத்தின் முக்கிய நகரை கைப்பற்றியதையடுத்து, போரில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அசர்பைஜான் அறிவித்தது.