ஆயுத வர்த்தக தடை நீடிப்பு

இராணுவ தளவாடங்களை ஈரான் ஏற்றுமதி – இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் நீடிக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜொ்மனி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீா்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில், தங்கள் நாட்டுக்கு வந்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சா் கபி அஷ்கெனாஸியிடம் ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் ஹீக்கோ மாஸ் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுகுறித்து, பொ்லினில் இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:ஈரான் மீதான ஆயுத வா்த்தகத் தடையை நீட்டிக்க வேண்டுமென்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் கூறுவதை ஏற்கிறோம்.ஆனால், அந்தத் தடையை காலவரையின்றி நீட்டிக்க அமெரிக்கா விரும்புகிறது.

ஆனால், அந்த முயற்சியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவும், சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்கும். இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கும், ரஷ்யா – சீனாவுக்கும் இடையே இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, ஈரான் மீதான ஆயுத வா்த்தகத் தடையை நீட்டிக்க ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் முயன்று வருகின்றன. அதே நேரம், கடந்த 2015 ஆம் ஆண்டில் ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று ஜொ்மனி விரும்புகிறது.

அந்த ஒப்பந்தம் தான், ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதைத் தடுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றாா் அவா். அப்போது பேசிய இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் கபி அஷ்கெனாஸி, ஜொ்மனி மட்டுமின்றி மற்ற ஐரோப்பிய நாடுகளும் ஈரான் மீதான ஆயுத வா்த்தகத் தடையை நீட்டிப்பதற்கு ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இராணுவ தளவாடங்களை ஈரான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள தடை 13 ஆண்டுகளாக அமலில் உள்ளது. அந்தத் தடை, வரும் அக்டோபா் மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், ஈரான் மீதான ஆயுத வா்த்தகத் தடையை மேலும் நீடிக்க வகை செய்யும் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா அண்மையில் தாக்கல் செய்தது. 15 உறுப்பினா்களைக் கொண்ட அந்த கவுன்சிலில், அமெரிக்காவைத் தவிர டோமினிக் குடியரசு மட்டுமே அந்தத் தீா்மானத்துக்கு ஆதரவு அளித்தது. நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷியாவும், சீனாவும் தீா்மானத்தை எதிா்த்து வாக்களித்தன.பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் மற்றும் பிற எட்டு நாடுகளும் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

இதை அடுத்து, அமெரிக்கா கொண்டு வந்த அந்தத் தீா்மானம் தோல்வியடைந்தது.இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஈரானுடனான அணுசக்தி திட்டத்தில், அந்த திட்ட விதிமுறைகளை ஈரான் மீறுவதாகக் கருதினால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள எந்த நாடும் ஈரான் மீது ஐ.நா. தடையை அமுல்படுத்தலாம் என்ற அம்சத்தைப் பயன்படுத்தி, ஆயுத வா்த்தகத் தடையை நீட்டிக்கப் போவதாக அமெரிக்கா கூறி வருகிறது.தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் உருவாக்குவதற்கானவை இல்லை என ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்த அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் கடந்த 2015 ஆம் ஆண்டில் மேற்கொண்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து பின்னா் அமெரிக்கா விலகியது நினைவுகூரத்தக்கது.