ஆன்லைன் விளையாட்டுகள்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கோரியும், அதன் விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய கோரியும், வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டையும் தடை செய்யக் கோரி வழக்கறிஞர் வினோத் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகள், இளைஞர்களை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிப்பதாக தெரிவித்தனர்.

மேலும், பெற்றோர் உறங்க சென்ற பிறகு, ஆன்லைனில் விளையாட தொடங்கும் பிள்ளைகள், அதிகாலை வரை விளையாடுவதாகவும், இந்த விளையாட்டுகளுக்கு குழந்தைகளும் அடிமையாவதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கில் விராட் கோலி, தமன்னாவை எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டுமென விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களை மட்டும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், வழக்குக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.