ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பறிபோனது இன்னொரு உயிர்!

கோவை மாவட்டம் சீர நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பவர், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணி செய்து வந்தார். ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிட்டு வந்த மதன்குமார், அதன்மூலம் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

அந்த ஆர்வத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட அவர், அதிக அளவிலான பணத்தை இழந்துள்ளார். இதற்காக தனது இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல பொருட்களை விற்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால் விரக்தி அடைந்த மதன்குமார், நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பலர் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.