ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை செங்குன்றம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்.  தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி சரண்யா என்ற மனைவி உள்ளார்.  சரண்யா தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான தினேஷ் தன்னுடைய வருமானம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தாக கூறப்படுகிறது. அப்போதும் அதனை கைவிடாத தினேஷ், நண்பர்களிடம் கடன் வாங்கியும் அதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் தினேஷ் வாங்கிய கடனுக்கு தங்களது கைவசம் இருந்த சொத்தை விற்று கடன்களை அடைத்து உள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்து சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் மனமுடைந்த தினேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக தகவலறிந்து வந்த  செங்குன்றம் காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாநில அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்ததை போன்று ஆன்லைன் சூதாட்டத்தையும் தடை செய்ய வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.