
சோமாலியா தலைநகர் மொகடிசுவின் லிடோ கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உயர்தர சொகுசு ஹோட்டல் ஒன்றில், அல்-ஷபாப் ஆயுதக் குழு நடத்திய துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 12பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த ஹோட்டலுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்ததாக கூறப்படுகிறது. ஹோட்டலில் துப்பாக்கிச்சூடும் மற்றும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், ஹோட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
மூன்று மணி நேர கடுமையான துப்பாக்கிச் சண்டையின் பின்னர் ஹோட்டல் முற்றுகை முடிவடைந்தது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் முக்தார் உமர் கூறினார்.
உயிரிழந்த 12 பேரில் இரண்டு அரசு ஊழியர்கள், மூன்று ஹோட்டல் பாதுகாப்பு காவலர்கள், நான்கு பொதுமக்கள் மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் உள்ளனர் என்று பொலிஸ் அதிகாரி அகமது பஷானே மேற்கோளிட்டுள்ளார்.
மேலும், தாக்குதல் நடத்திய நான்கு பேரும் சிறப்பு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்மாயில் முக்தார் உமர் கூறினார்.
சமீபத்தில் கட்டப்பட்ட ஹோட்டல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது என்றும் இந்த ஹோட்டல் அதிகாரிகளிடையே பிரபலமானது என்றும் கூறப்படுகின்றது.
கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷாபாப் இயக்கத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.