அரசு குழந்தைகள் காப்பகத்திற்காக கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (5-11-2020) தலைமைச் செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் மதுரை மாவட்டம், மதுரை, டாக்டர் தங்கராஜ் சாலையில் அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், துயிற்கூடங்கள், சமையலறை, வகுப்பறைகள், அலுவலக அறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். 

முதலமைச்சர் பழனிசாமி கடந்த 13.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்க தமிழ்நாடு அரசால் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகம், 1986-ஆம் ஆண்டிலிருந்து மாநகராட்சி கட்டடத்தில் இயங்கி வருகின்றது. தற்போது இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், ஒரு புதிய கட்டடம், துயிற்கூடம், குழந்தைகள் நலக் குழு அறை, வகுப்பறை, தொழிற் பயிற்சி கூடம் மற்றும் உணவுக் கூடம் ஆகியவை கட்டப்படும்” என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடத்தை, முதல்வர் பழனிசாமி நேற்று  மாண்புமிகு சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் திருமதி எஸ். மதுமதி, அரசு உயர் அலுவலர்கள் முன்னிலையில் திறந்துவைத்தார்.