“அரசுப் பணியில் உள்ளவர்கள் இலவச சலுகைகளை பெற்றால் பணி நீக்கம் செய்ய வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர், அரசின் சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா இடத்தில் இருந்து தன்னை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மற்றும் அவரது மகனும் அரசு ஊழியர்கள் என்பதை மறைத்து அரசின் இலவச பட்டாவை பெற்றுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரர் மற்றும் அவரது மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, மனுவை திரும்பப்பெற விரும்புவதாக மனுதாரர் ராஜா தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அரசு ஊழியர் என்பவர் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், இதுபோல விதிமுறைகளை மீறி அரசின் இலவச சலுகைகளை பெற்ற அரசு ஊழியர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்தால் தான் வருங்காலங்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க முடியும் என தெரிவித்த நீதிபதிகள், இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.