அரசியல்வாதி ஒருவரின் ஊழலை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளருக்கு வீட்டுத்திட்டம் இடைநிறுத்தம் – வீட்டுத்திட்ட கோவையில் இருந்த ஆவணங்கள் சிலவும் திருட்டு

அரசியல்வாதி ஒருவரின் ஊழலை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளருக்கு வீட்டுத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டுத்திட்ட கோவையில் இருந்த ஆவணங்கள் சிலவும் திருடப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஊடகவியலாளரிற்கே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு காலப்பகுதியில் அரசியல்வாதி ஒருவரின் அதிகார துஸ்பரயோகம் தொடர்பில் செய்தி வெளிக்கொண்டு வரப்பட்டது. குறித்த செய்தியறிக்கையிடலினால் அரசியல் செல்வாக்கை இழந்த ஓர் தமிழ் அரசியல்வாதியின் பழிவாங்கும் செயற்பாட்டினால் குறித்த ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.


குறித்த காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரிற்கான காணி உள்ளிட்ட ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வீட்டுத்திட்டம் சிபாரிசு செய்யப்பட்டது. தொடர்ந்து குறித்த ஊடகவியலாளர் முதல்கட்ட கட்டுமான பணிகளை முடித்துக்கொண்டு பிரதேச செயலகத்திடம் அதற்கான பணத்தினை வைப்பிட கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த கட்டுமான பணிகளை பார்வையிட்ட பிரதேசத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வீட்டத்திட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் முதல் கட்ட பணமான இரண்டு லட்சத்தினை விடுவிப்பதற்கான சிபாரிசினை பிரதேச செயலாளரிடம் முன்வைத்தனர். அதற்கு அமைவாக குறித்த முதல்கட்ட வைப்பு தொகையான இரண்டு லட்சம் ரூபா குறித்த ஊடகவியலாளரின் வைப்பு கணக்கில் வைப்பு செய்யப்பட்டது. குறித்த வைப்பிற்காக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் மாங்குளத்தில் அமைந்துள்ள சமுர்த்தி அபிவிருத்தி வங்கியில் தனிநபர் கணக்கொன்றை ஆரம்பிக்குமாறும் பணித்திருந்துள்ளது.

குறித்த வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்ட இரண்டு லட்சம் ரூபா வைப்பு தொகையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாவை மாத்திரம் விடுவிக்கவும், இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படும்போது மிகுதி பணத்தினை விடுவிக்கவும் பிரதேச செயலகம் வீட்டுத்திட்ட பயனாளியான ஊடகவியலாளரிடம் குறிப்பிட்டிருந்தது. அதற்கமைவாக முதல் கட்டமாக ஐம்பதாயிரம் ரூபாவை பெற்று கட்டுமான பணியின் தொடர்ச்சியை மேற்கொண்டு வந்த நிலையில், மேலே குறிப்பிட்டவாறு அரசியல்வாதியின் தலையீடு ஆரம்பமாகியுள்ளது.
குறித்த ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை நிறுத்துவதற்கு பல வழிகளிலும் முயற்சித்த அந்த தமிழ் அரசியல்வாதி இயலாமையின் உச்ச கட்டத்தில் தமது கட்டுப்பாட்டில் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உதவியுடன் அனுமதியற்ற கட்டடம் அமைப்பது தொடர்பில் வழக்கொன்றை பதிவு செய்தனர்.

இவ்வாறான நிலையில் வீட்டுத்திட்ட பணிகள் முன்னெடுத்திருந்த கட்டுமான பொருட்களிற்கு நிலுவையை செலுத்த குறித்த ஊடகவியலாளர் அண்மையில் சமுர்த்தி வங்கியில் வைப்பிலிருந்து மிகுதி தொகையை பெற்றுக்கொள்ள சென்றுள்ளார். குறித்த வங்கியில் வைப்பிலிருந்த தொகையில் ஒருலட்சத்து ஐம்பதாயிரம் மீள பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஊடகவியலாளர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். தனிநபர் கணக்கில் வைப்பிடப்பட்ட தொகையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபா மாத்திரம் மீளபெறப்பட்ட நிலையில் மிகுதி பணம் கணக்குரிமையாளர் தவிர்ந்து வேறு எவரும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் குறித்த பணத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தகவலை வெளியிட மாங்குளம் சமுர்த்தி வங்கி தயங்கியது.


நிலைமையை உணர்ந்த ஊடகவியலாளர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக கணக்கின் விபரத்தினை கேட்டுள்ளார். குறித்த விண்ணப்பத்திற்கு அமைவாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலின் அடிப்படையில் பிரதேச செயலாளரின் கடிதமொன்றினை அடிப்படையாக வைத்து மீளளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த பிரதேச செயலாளரின் கடிதத்தில் என்ன அடிப்படையில் குறித்த பணம் மீள பெற்றுக்கொள்ளப்படுகின்றது என்ற விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதேவேளை வங்கி ஒன்றில் தனிநபர் கணக்கு நடைமுறையும் இங்கு பிற்பற்றப்பட்டிருக்கவில்லை என பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் சமுர்த்தி உதவி ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

சமுர்த்தி வங்கியானது ஏனைய வங்கி நடைமுறைகளையே பின்பற்ற வேண்டிய நிலையில், தனிநபர் கணக்கொன்றில் இருந்த தொகையானது கணக்குரிமையாளரின் அனுமதியின்றியோ அல்லது அவருக்க தகவல் வழங்கப்படாமலோ கையாளப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக சமுர்த்தி வங்கி முகாமையாளரிடம் தகவல்கள் கோரப்பட்ட போதிலும் அதற்கான பதில் இதுவரை ஊடகவியலாளருக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறான நிலையில் குறித்த அரசியல்வாதியின் பழிவாங்கலிற்கு அமைவாக வீட்டுத்திட்டத்தினை நிறுத்த முனைப்பு காட்டப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த குறித்த ஊடகவியலாளர், குறித்த பண தொகையானது என்ன அடிப்படையில் மீள பெறப்பட்டது என்பது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக வினவியிருந்தார். இதன்போது குறித்த பணமானது வீட்டுத்திட்ட உடன்படிக்கையின் 1.7 சரத்தின் பிரகாரம் வைப்பு செய்யப்பட்ட பணம் பிரதேச செயலாளரின் எழுத்து மூல கோரிக்கைக்கு அமைவாக மீள பெறப்பட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.குறித்த சரத்தானது வழங்கப்பட்ட நிதியை முறைகேடாகவோ, அல்லது பயன்படுத்தாமலோ இருந்தால் மீளப்பெற முடியும் என்ற விடயத்தினையே காண்பிக்கின்றது.

வைப்பிடப்பட்ட பணமான இரண்டு லட்சம் முதல் கட்ட கட்டுமான பணி முடிவடைந்ததை பார்வையிட்ட பின்னரே வைப்பு செய்யப்பட்ட தொகை என பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறான நிலையில், வீட்டுத்திட்ட பயனாளி கோவையானது உரிய முறையில் பேணப்படுகின்றதா என்ற சந்தேக குறித்த ஊடகவியலாளருக்கு எழுந்துள்ளது. குறித்த சந்தேகத்தை தீர்ப்பதற்காக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குறித்த பயனாளி கோவையை பார்வையிடுவதற்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரியிருந்தார். குறித்த கோவையை பார்வையிடுவதற்கு நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டது.

நேற்று புதன்கிழமை காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் முன்னிலையில் பார்வையிட்டபோது கோவையிடப்பட்ட காணி சிபாரிசு ஆவணம் தொலைந்து விட்டதாக பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவரால் கூறப்பட்டது. ஏனைய ஆவணங்கள் இருக்க குறித்த காணி தொடர்பான ஆவணம் மாத்திரம் காணாமல் போனது தொடர்பில் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த ஆவணம் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கோரியிருந்தபோது தெளிவில்லாத பிரதி ஒன்று உதவி பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டது. இன்று பார்வையிட்ட பயனாளி கோவையிலும் குறித்த தெளிவில்லாத ஆவணமே காண்பிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆவணத்திற்கு என்ன நடந்தது என மேலதிக அரசாங்க அதிபர் வருகை தந்திருந்த உத்தியோகத்தரிடம் கோரியிருந்தார். இதன்போது அலுவலகத்தில் பாதுகாப்பு இல்லாமல் இருந்த சந்தர்ப்பத்தில் தவறியுள்ளதாக அவர் சாதாரணமாக பதிலளித்துள்ளார். ஒரு முக்கிய நிர்வாக அலுவலகத்தில் இவ்வாறு பொதுமக்களின் ஆவணங்கள் தவறுவது தொடர்பில் சாதாரணமான விடயமாக அமைந்து விடாது. எனவே, குறித்த அரசியல்வாதியின் சலுகைகளிற்கு இணங்கி நடந்தவர்கள், தமது தவறுகளை மறைப்பதற்கு இவ்வாறான முக்கிய ஆவணங்களை அழித்துவிட்டு தவறிவிட்டது என சாதாரணமாப்பது செயற்திறனற்ற நிர்வாக கட்டமைப்பு ஒன்று நிகழ்கின்றமையையே உணர்த்துகின்றது.


இவ்வாறான நிலையில் காசு மீள பெறப்பட்ட விடயம் தொடர்பிலும் அதற்கான ஆவணத்தை காண்பிக்குமாறும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கேட்டுள்ளார். மேலே குறிப்பிடப்பட்ட சரத்திற்கு அமைவாகவே பணம் மீள பெறப்பட்டதாக இதன்போது பதில் அளிக்கப்பட்டது.

வீட்டுத்திட்ட பணிகள் ஆரம்பிக்கப்படும்போது பிரதேச செயலகம் மற்றும் பயனாளிக்கிடையில் ஒப்பந்தம் செய்யப்படும் நடைமுறை பொதுவாகவே உள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த ஒப்பந்தத்தின் எந்தவொரு சரத்தையும் மீறாமலும், சரத்தின் 1.7ல் குறிப்பிடப்படுவது போன்று குறித்த பணம் பயன்படுத்தப்படாமலோ அல்லது முறைகேடாக பயன்படுத்தப்படவோ இல்லை. முதல் கட்ட கட்டுமான பணிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் பார்வையிட்ட பின்னரே பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை குறித்த பண விடுவிப்பு பத்திரம் தெளிவாக காண்பிக்கின்றது. 


வங்கியில் வைப்பிடப்பட்ட தொகையானது முறையாக பயன்படுத்தப்பட்ட தொகை என்பதுடன், தனி நபர் கணக்கில் இருந்த தொகையுமாகும். குறித்த நிதியை முறையற்ற விதத்தில் மீள பெற்றுக்கொண்ட பிரதேச செயலகம் மற்றும் தனிநபர் கணக்கு நடைமுறைகளை பின்பற்றாமல் மீளளிப்பு செய்ய சமுர்த்தி அபிவிருத்தி வங்கி ஆகியன தொடர்பிர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு ஆவணரீதியான ஆதாரத்துடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சுக்களின் கவனத்திற்கும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


பொதுமக்கள் சேவைக்காக நியமிக்கப்படும் அரச உத்தியோகத்தர்கள் அரச நிர்வாக நடைமுறைகளை பின்பற்றாமலும், பொதுமகன் ஒருவரை தனிப்பட பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் சமகாலமாக இடம்பெற்று வருகின்றது. குறித்த அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வருவார்களா? செய்தி அறிக்கையிடல்கள் ஊடாக மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நினைக்கும் ஊடகவியலாளர்களை இவ்வாறு பழிவாங்கும் நோக்குடன் செயற்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாகின்றது.