அரசாங்கம் சர்வதேசத்திற்கும் பிராந்திய வல்லரசுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை காற்றில் விட்டால் நடப்பதுவேறு- சுமந்திரன்

பிராந்திய வல்லரசுக்கும், முழு சர்வதேசத்திற்கும் மூன்று தடவை கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் காற்றில் பறக்கவிடுமாக இருந்தால் அதுதான் இலங்கை என்ற நாடு விடுகின்ற மாபெரும் தவறாக இருக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிழையினூடாக தமிழர்களின் எதிர்ப்பை மாத்திரமல்லாது, முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கும் சிங்கள மக்களினுடைய எதிர்ப்பை மாத்திரமல்லாது, முழு உலகத்தினுடைய எதிர்ப்பையும் எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “ஓர் ஜனநாயக புரட்சி ஊடாக நாட்டிலே அரசியலை மாற்றி அதன்மூலம் வந்த 19ஆவது திருத்தத்தை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுகின்ற நிகழ்ச்சி ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. வருகின்ற நாட்களிலே அது முழுமையாக நிறைவேறப்போகின்றது.

நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போகின்றது என இன்று பலர் குரல் கொடுக்கின்றார்கள். இந்த அரசாங்கத்தை ஆதரித்தவர்கள்கூட இன்று அதற்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்நிலையில் ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த விடயத்தை நாங்கள் எதிர்ப்போம்.

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு மேலும் தள்ளிப்போவதற்கான சூழ்நிலை தென்படுகின்றது. ஆனால், அப்படியான சங்கடங்கள் ஏற்படுகின்ற வேளைகளில்தான் தீர்வுகளும் வரும்.

1983ஆம் ஆண்டு நாடுமுழுவதும் தமிழ் மக்கள் அடித்து, கலைக்கப்பட்டு, கொல்லப்பட்டு அவர்களது உடமைகள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்ட வேளையில்தான் இந்தியா தலையிட்டது. அக்காலப் பகுதியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் பிரதிபலனாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. அது போதிய தீர்வு இல்லை என்பது இன்றைக்கும் எங்களுடைய நிலைப்பாடாகும். அது போதிய தீர்வில்லை என்பதை இலங்கை அரசாங்கமும் பல தடவை ஏற்றுக்கொண்டுள்ளது.

விசேடமாக மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுடன் இணைந்து மூன்று தடவைகள் கூட்டறிக்கை விடுத்துள்ளார். 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவேன், அதற்கும் அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக ஆக்குவேன் என்று சொல்லியிருக்கின்றார். இதனடிப்படையில் தற்போது இருக்கின்ற முறைமையானது ஓர் அர்த்தமில்லாத முறைமை என்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள்.

அதை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம் எனவும் உறுதி கொடுத்துள்ளார்கள். ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுகின்றபோது அது மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளிடம் கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது மக்களுக்கு கொடுக்கப்படுகின்ற ஆட்சி அதிகாரங்களாக இருக்கும். மாறாக மத்திய அரசாங்கத்திலே ஒரு அமைச்சர், மூன்று அரை அமைச்சர்கள் என தனிப்பட்ட ரீதியிலே அவர்களுக்கு பதவிகளைக் கொடுப்பது மக்களுக்குக் கொடுக்கின்ற ஆட்சிப் பகிர்வு அல்ல.

இப்பொழுது இருக்கின்ற மாகாண சபை முறைமையிலே ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட்டதாக சொல்லப்பட்டாலும் கூட அது இல்லை. சட்டமாக்கல் அதிகாரம் மாகாண சபைக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், எந்தச் சட்டத்திற்கும் அனுமதி கொடுக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

அந்த அனுமதியைக் கொடுப்பது ஆளுநரே. ஆளுநர் அனுமதி கொடுத்தால்தான் அது அந்த மாகாணத்தில் சட்டமாகும். சட்டவாக்கல் சபை அதனை நிறைவேற்றினாலும்கூட ஜனாதிபதியில் நேரடி பிரதிநிதியாக இருக்கின்ற ஆளுநர் கைச்சாத்திடாமல் அது சட்டமாகாது. ஆகவே சட்டமாக்கம் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் முழுமையாக கொடுக்கப்படவில்லை.

அதேவேளை, நிறைவேற்று அதிகாரமும் ஆளுநரின் கைகளிலேயே உள்ளது. அமைச்சர் வாரியத்தினுடைய அனுமதியுடன் அவர் செயற்பட வேண்டும் என்று அரசியலமைப்பிலே கூறியிருந்தாலும்கூட, மாகாண சபைகள் சட்டம் என்ற சட்டத்தின்படி அந்த அதிகாரங்களை ஆளுநர் நேரடியாகவே உபயோகிக்கின்றார்.

ஆகையினாலே, நிறைவேற்று அதிகாரம்கூட அதிகாரப் பகிர்வு என்பதற்கு உட்படுத்தப்படாமல் மத்திய அரசினுடைய பிரதிநிதியான ஆளுநரின் கைளிலே தொடர்ச்சியாக இருக்கின்றது. ஆகையினால்தான் மாகாணசபை முறைமை அர்த்தமில்லாது இருக்கின்றது. அதனை அர்த்தமுள்ளதாக்குவோம் என்கின்றார்கள். இந்த வாக்குறுதிகள் எழுத்து மூலமாக இன்றைய பிரதமர் ஜனாதிபதியாக இருந்தபோது கொடுக்கப்பட்ட வாக்குறுதியாகும்.

எனவே, சர்வதேசத்திற்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளை இங்கே வாழ்கின்ற எமக்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளைப்போல தட்டிக்கழிக்க முடியாது. இந்த வாக்குறுதியானது பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு கொடுத்த வாக்குறுதியாகும்.

இந்திய இந்த விடயங்களிலே தலையிட்டு தன்னுடைய நல்லெண்ணத்தின் மூலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முன்வந்தபோது பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தன்னுடைய பிரதிநிதியை உடனடியாக இலங்கைக்கு அனுப்பியபோது இலங்கை அதனை ஏற்றுக்கொண்டது.

தலையீடு செய்து மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் இன்றும் அமுலில் இருக்கின்றது. ஆகவே, தமிழ் மக்களுக்கு தேர்தல் காலங்களில் கொடுக்கின்ற வாக்குறுதிகளைப்போல் அல்லாது சர்வதேசத்திற்கு விசேடமாக அண்டை நாடான இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை அவ்வளவு இலகுவாக மீறமாட்டார்கள். மீறவும் முடியாது.

இந்தியாவிற்கு மட்டுமல்லாது மேலைத்தேச நாடுகளனைத்திற்கும் முழு சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 47 உறுப்பு நாடுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் தெரிவுசெய்யப்படுகின்ற நாடுகள்.

அத்தனை நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கின்றது. அங்கும் மூன்று தடவைகள் வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை கொடுத்திருக்கின்றார்கள். இந்தியாவிற்கு எவ்வாறு மூன்றுதடவை எழுத்திலே வாக்குறுதி கொடுத்தார்களோ அதேபோன்று முழு சர்வதேசத்திற்கும் இலங்கை அரசு மூன்று தடவை எழுத்திலே வாக்குறுதி கொடுத்திருக்கின்றது.

அந்த வாக்குறுதிகளிலும்கூட கூடுதலான அதிகாரப் பகிர்வின் ஊடாக ஓர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் மீள நிகழாமைக்கான உத்தரவாதத்தினை கொடுக்கின்றோம் என சொல்லியிருக்கின்றார்கள். நிலைமாறுகால நீதியிலே நான்காவது தூணாக சொல்லப்படுவது இந்த மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதமாகும்.

ஓர் புதிய அரசியலமைப்பின் ஊடாகவே இந்த மீள்நிகழாமைக்கான உத்தரவாதத்தினை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. அதிகாரப் பகிர்வை மேலும் அதிகரிப்பதன் ஊடாக அதனை உறுதிப்படுத்துவதாக அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள்.

ஆகையினாலே, இன்றைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இந்த நாட்டிலே அவர்கள் பெற்றிருக்கின்ற ஒரே காரணத்திற்காக பிராந்திய வல்லரசுக்கு மூன்று தடவை கொடுத்த வாக்குறுதியையும், முழு சர்வதேசத்திற்கும் மூன்று தடவை கொடுத்த வாக்குறியையும் காற்றிலே இலங்கை அரசாங்கம் பறக்கவிடுமாக இருந்தால் அதுதான் இலங்கை என்கின்ற நாடு விடுகின்ற மாபெரும் தவறாக இருக்கும்.

அதை நாங்கள் திரும்பத் திரும்ப இலங்கை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டுகின்றோம். இந்த தவறை விடவேண்டாம் என்று சொல்லுகின்றோம். தொடர்ச்சியாக நீங்கள் இந்த தவறான பாதையிலே பயணிப்பீர்களேயாக இருந்தால், எங்களுடைய எதிர்ப்பை மாத்திரமல்லாது முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கும் சிங்கள மக்களினுடைய எதிர்ப்பை மாத்திரமல்லாது முழு உலகத்தினுடைய எதிர்ப்பையும் நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.