அமைச்சர்களை எதிர்த்து ஆளுங்கட்சி எம்.பி. இராஜினாமா!

அமைச்சர்களின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையில் பாதுக்க பிரதேச அபிவிருத்திக் குழு தலைமைப்பதவியை இராஜினாமா செய்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று கடிதமொன்றையும் அவர் அனுப்பிவைத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கூறியவை வருமாறு,

“ஜனாதிபதி மற்றும் பிரதமரால் எடுக்கப்படும் தீர்மானங்கள் சில அமைச்சர்களின் செயற்பாடுகளால்தான் பயனற்றுபோகின்றன. பாதுக்க பிரதேசத்தின் அபிவிருத்திக்குழு தலைவரான ஜனாதிபதி என்னை நியமித்தார்.சிவில் தரப்பினர், பொலிஸார், பிரதேச சபையினருடன் இணைந்து சிறப்பாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்தன. எனினும், அரசியல் ரீதியில் அழுத்தங்கள் வந்தன. பொலிஸார் சுயாதீனமாக செயற்பட்டால் பாதுகாக்கப்பட்டோம்.

இந்நிலையில் பாதுகாக்க பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு வேண்டியவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கீழ்த்தரமான செயலை செய்ய வேண்டாம் என விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகரவிடம் வலியுறுத்தியிருந்தேன். ஏனெனில் பொலிஸானது அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது. கீழ்த்தரமாக செயற்படும் இத்தகைய அமைச்சர்களுடன் இணைந்து செயற்படமுடியாது என்பதால் பதவி விலகும் முடிவை எடுக்கின்றேன்.” -என்றார்.