அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான விஜயம் இன்னமும் உறுதியாகவில்லை

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான விஜயம் இன்னமும் உறுதியாகவில்லை என அமெரிக்க தூதரகத்தை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீன உயர் மட்ட அதிகாரிகளின் அண்மைய வருகைக்குப் பின்னர், அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் இந்த மாத இறுதியில் கொழும்புக்கு வருவார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் மைக் பொம்பியோவின் வருகை குறித்து அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதா என குறித்த ஆங்கில ஊடகம் வினவியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள தூதரகம், “இந்த நேரத்தில் எந்த உத்தியோகபூர்வ பயணமும் உறுதிப்படுத்தப்படவில்லை. குறித்த விஜயம் உறுதிசெய்யப்பட்டவுடன் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என பதிலளித்துள்ளது.

அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த மைக் பொம்பியோ 2019 ஜூன் மாதம் கொழும்புக்கு செல்ல திட்டமிடப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது, பயங்கரவாதத்தை எதிர்ப்பது, இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தடையில்லா போக்குவரத்து மற்றும் 480 மில்லியன் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

எவ்வாறாயினும், ஒசாக்காவில் நடைபெற்ற ஜி -20 உச்சிமாநாட்டிற்கான அமெரிக்க ஜனாதிபதி பயணத்திற்கு முன்னதாக நடைபெறவிருந்த இந்த விஜயம் எம்.சி.சி மற்றும் சோபா ஒப்பந்தம் ஆகியவற்றை இறுதி செய்ய கடும் எதிர்ப்பு ஊடகங்களில் வெளியானதை அடுத்து இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.