அமெரிக்காவில் சீன விஞ்ஞானி கைது!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் சீன தூதரக அலுவலகத்தில் தஞ்சம் புகுந்து பதுங்கியிருந்த சீன விஞ்ஞானி டாங் ஷுவான் அமெரிக்க பொலிசாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான அவருக்கு இராஜதந்திர பாதுகாப்பு இருக்கவில்லையென அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த வாரம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்களின்படி, டேவிஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த டாங் ஷுவான் சீன இராணுவத்தில் பணியாற்றாததாக தனது விசா விண்ணப்பத்தில் பொய்யாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது ஜூன் 26 அன்று விசா மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

வியாழக்கிழமை இரவு டாங் கைது செய்யப்பட்டதாகவும், அவர் ஒரு இராஜதந்திர அதிகாரியாக அறிவிக்கப்படாததால் இராஜதந்திர பாதுகாப்பு இல்லை என்றும் நீதித்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

ஜின் வாங், சென் சாங் மற்றும் கைகாய் ஜாவோ என்ற ஏனைய மூன்று சீன ஆராய்ச்சியாளர்களுக்கு எதிராகவும் குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் திணைக்களம் அறிவித்துள்ளது.

“சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் இந்த உறுப்பினர்கள், இராணுவத்துடனான  உண்மையான தொடர்பை மறைத்துக்கொண்டு ஆராய்ச்சி விசாக்களுக்கு விண்ணப்பித்தனர்” என்று தேசிய பாதுகாப்பு உதவி சட்டமா அதிபர் ஜான் சி டெமர்ஸ் வியாழக்கிழமை அறிக்கையில் தெரிவித்தார்.

“இது நமது திறந்த சமுதாயத்தைப் பயன்படுத்தி கல்வி நிறுவனங்களை சுரண்டுவதற்கான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தின் மற்றொரு பகுதியாகும். இந்த விசாரணையை எஃப்.பி.ஐ உடன் தொடர்ந்து நடத்துவோம்.” என்றார்.
நீங்கள் எப்போதாவது இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு டாங் மற்றும் ஜாவோ இருவரும் “இல்லை” என்று பதிலளித்தனர் என நீதித்துறையின் ஆவணம் கூறியது. வாங் மற்றும் சாங் இருவரும் சீன இராணுவத்தின் சேவையில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் வாதிடுகின்றனர்.

ஒவ்வொரு பிரதிவாதிக்கும் விசா மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 250,000 டொலர் அபராதமும் விதிக்கப்படும் என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு குறித்து சீன தூதரகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

வர்த்தகம், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாளுதல், தொழில்நுட்பம், உளவு குற்றச்சாட்டுகள், ஹாங்காங் மற்றும் சீன முஸ்லிம்களுக்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல மோதல்களுக்கு மத்தியில் சீன-அமெரிக்க பதற்றம் அதிகரித்துள்ளன.
வெள்ளியன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை சீனாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு “தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதற்கான ஆபத்து” குறித்து எச்சரிக்கை அனுப்பியது.
“அமெரிக்க குடிமக்கள் நீண்டகால விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் மற்றும் ‘தேசிய பாதுகாப்பு’ தொடர்பான காரணங்களுக்காக நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவலுக்கு உட்படுத்தப்படலாம்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தை விமர்சிக்கும் “தனியார் மின்னணு செய்திகளை அனுப்பியதற்காக” அமெரிக்கர்கள் கைது செய்யப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே அமெரிக்காவில் உள்ள மேலும் சில சீன தூதரகங்களை மூட உத்தரவிட வாய்ப்பு உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தூதரக ரீதியிலான இந்த பிரச்சினையை அமெரிக்கா மற்றும் சீனா இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.