அமெரிக்கவாழ் இந்தியர்களில் 6.5% பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

உலகின் கல்வி வேலைவாய்ப்புகளை அதிகம் கொண்ட நாடுகளில் முதன்மையானதாக அமெரிக்கா இருந்து வருகிறது. இங்கு வேலை தேடியும் கல்வி பயிலவும் இந்தியா, சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏரளமான மக்கள் செல்கின்றனர். இதில் இந்தியாவில் இருந்து மட்டும் தொழில்நுட்பத்துறை மற்றும் இதர வேலைகளுக்காகவும் அமெரிக்காவில் 42 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் மொத்தமுள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களில் 6.5% பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதாகவும் தற்போதுள்ள கொரோனா பாதிப்பு மேலும் மக்களை வறுமையை நோக்கி தள்ளும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸின் பால் நிட்ஜ் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் தேவேஷ் கபூர் மற்றும் ஜஷான் பஜ்வாட் ஆகியோரால் நடத்தப்பட்ட ஆய்வின் படி, அமெரிக்காவில் வசித்து வரும் வங்கமொழி மற்றும் பஞ்சாபி பேசும் இந்தியர்களிடையே வறுமை மிகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வின் மூலம் பின்தங்கிய இந்திய அமெரிக்கர்களின் நிலை குறித்து நாங்கள் கவனத்தை ஈர்க்க விரும்பினோம்” என்று இந்தியாஸ்போராவின் நிறுவனர் எம்.ஆர்.ரங்கசாமி கூறினார். கொரோனாவால் ஏற்கனவே பலரும் பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள நமது சமுதாயத்தின் வறுமை நிலையை கண்டுபிடிக்க இந்த ஆய்வு உதவியுள்ளதாக தெரிவித்தார். இது இந்த பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தி அமெரிக்கவாழ் இந்தியர்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகுக்கும் என நம்புவதாக ரங்கசாமி தெரிவித்தார். 

இருப்பினும் ஆய்வின் படி, அமெரிக்காவில் உள்ள வெள்ளை மற்றும் கருப்பின மக்களை காட்டிலும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் வறுமையில் தள்ளப்படுவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.