“அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்காமல் வேல் யாத்திரை நடத்தியது ஏன்?” -பாஜகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பா.ஜ.வின் வேல் யாத்திரையை தடுக்க கூடாது, என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேல் யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் தனி மனித விலகலை பின்பற்றவில்லை எனவும், எல்.முருகன் முறையாக முகக் கவசம் அணியவில்லை எனவும், டிஜிபி அளித்த அறிக்கையை மேற்கோள்காட்டி, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், வாதிட்டார்.

மேலும், வேல் யாத்திரை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளானதாகவும், தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இது கோவில் யாத்திரை அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை எனக் கூறிய அவர், 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வதாகக் கூறிவிட்டு, அதை மீறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பா.ஜ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 38 கோவில்களில் 30 பேருடன் 18 வாகங்களில் சென்று வழிபாடு நடத்த அனுமதியளிக்க கோரி, கடந்த 9ம் தேதி விண்ணப்பித்ததாக குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? கடந்த மூன்று நாட்களாக கட்சி தலைவர்கள் கூடியுள்ளனர் என்றும், கட்சித் தலைவர் பெரிய வேல் ஒன்றை ஏந்திச் செல்கிறார். இது ஆயுத சட்டப்படி குற்றம் எனவும் சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதிலளித்த பா.ஜ.க தரப்பு வழக்கறிஞர், அது மரத்தால் செய்யப்பட்ட வேல் எனவும், யாத்திரைக்கு அனுமதி கோரிய தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து, அமைதியாக செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, வழக்கு தொடர பா.ஜ.வுக்கு அனுமதி அளித்ததுடன், வேல் யாத்திரையை தடுக்க கூடாது, என்ற இடைக்கால கோரிக்கை மனுவை முடித்து வைத்தனர்.

மேலும், கொரோனா விதிகளை கண்டிப்புடன் அனைத்துக் கட்சி கூட்டங்கள், மத கூட்டங்களுக்கும் பாரபட்சமில்லாமல் அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்த, அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 16-ம் தேதி வரை மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.