அதிபர் ட்ரம்ப்பை கொல்ல முயற்சியா? விஷம் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது!

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளை மாளிகைக்கு கனடா முகவரி ஒன்றில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகளுக்கு இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும், வெள்ளை மாளிகையை கடிதம் அடைவதற்கு முன்னர் அதனை கைப்பற்றிவிட்டனர். அதில் ரிசின் எனப்படும் விஷம் உள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 

இதனையடுத்து நியூயார்க்- கனடா எல்லையில் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். ஆனால் அவர் என்ன காரணத்திற்காக இந்த கடிதத்தை அனுப்பினார் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை. அதிபர் ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகையின் பெயரை குறிப்பிட்டே இது அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.