”அதிபர் ட்ரம்ப்பின் இந்திய பயணம்: கொரோனா பரிசோதனை தேவைப்படவில்லை”- மத்திய அரசு!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் மத்திய வெளியுறவு விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மாநிலங்களவையில் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.

அதிபர் ட்ரம்ப்பின் இந்திய பயணத்தின் போது கொரோனா பரிசோதனை தேவைப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் முறை கட்டாயமாக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள 21 விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கடந்த மார்ச் 4ம் தேதிதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இருப்பினும் சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டது. கொரோனா பாதிப்பை தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் 11ல் தான் அறிவித்தது’ என்று விளக்கமளித்துள்ளார்.