அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு ரயில் மூலம் ரூ.10,405 கோடி வருவாய்: இந்தியன் ரயில்வே தகவல்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 6 மாதங்களாக பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. எனவே அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக சரக்கு போக்குவரத்து மட்டும் இயங்கி வந்தது. இதனால் அக்டோபர் மாதத்திற்கான சரக்கு கையாள்வதின் அளவு மற்றும் போக்குவரத்தில் இந்திய ரயில்வே துறை தொடர்ந்து உச்சத்தைத் தக்க வைத்து கொண்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்திய ரயில்வே 108.16 மில்லியன் டன் அளவிற்கு சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 15 சதவீதம் (93.75 மில்லியன் டன்) அதிகமாகும். சரக்குப் போக்குவரத்தின் மூலமாக அக்டோபர் மாதம் ரூபாய் 10,405 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 சதவீதம் அதிகமாகும். இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 2.09 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, ரூ.162.42 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

ரயில்வே சரக்கு போக்குவரத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகளும், தள்ளுபடிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய வர்த்தகங்களை ஈர்க்கவும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும் இரும்பு, சிமெண்ட், எரிசக்தி  நிலக்கரி, வாகனங்கள் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த முதன்மைத் தலைவர்களுடன் ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.